45. (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)
46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.
47. அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
48. அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.
49. அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).
50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.
52. (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).