96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
97. (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்.
99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.
100. பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்.
101. ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
102. (நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்.