105. (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.
107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
108. (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''
109. உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
110. நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.
111. அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.