38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
39. சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?
40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)
41. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)
42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.
43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.