23. அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.
24. அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.
26. (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்,)
28. (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,
29. (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)
30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.