79. அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்.
80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.
81. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;
82. (நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)
83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,
84. அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.
85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.