31. (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
32. அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.
33. அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.
34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)
36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).
37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.