87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.
88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.
89. (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்.
90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.
91. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்.
92. அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்.
93. ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.
94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்.