123. நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
124. ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
125. ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து விட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்.
126. ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் சிரமத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விட்டுவிடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
127. (புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்.
128. (நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) உங்கள் நன்மையையே பெரிதும் விரும்புகிறவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க இரக்கமும் கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார்.
129. (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்.