113. இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)
114. இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்.
115. ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான், - அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கின்ற வரை. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
116. வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.
117. நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் மன்னித்தருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்டகாலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸாரிகள் மீதும் (மன்னித்தருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது மிக இரக்கமும் மிக்க கருணையும் உடையவன் ஆவான்.