101. (நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் நயவஞ்சகர்கள் (பலர்) இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.
102. வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தையும் மற்ற (சில) கெட்ட(காரியத்)தையும் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கருணையாளன் ஆவான்.
103. (நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
104. நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
105. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.