107. எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்.
108. ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்.
110. தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் போல் தைத்துக் கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
111. அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி.