80. (நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
81. (போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷ மடைகின்றனர். இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) ‘‘இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது'' என்று நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
83. (நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக.
84. மேலும், அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்.
85. அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும்தான் அல்லாஹ் விரும்புகிறான்.
86. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி ‘‘எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகிறோம்'' என்று கூறுகின்றனர்.