94. (நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.
95. (நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்.
96. (நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தி அடையவே மாட்டான்.
97. நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கி இருக்கும் (வேதத்தின்) சட்ட வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
98. (கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
99. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்.