62. நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
63. 'தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள்'' (என்று கூறினோம்.)
64. இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.
65. மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி ''நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தே இருக்கிறீர்கள்.
66. ஆகவே, இதை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறையச்சம் உடையவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்.
67. தவிர, ''ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்'' என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) “நீர் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?'' என்றார்கள். (அதற்கு) ''நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றன்'' என்றார்.
68. ''அ(ந்த மாட்டின் வய)து என்ன என்று எங்களுக்கு அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றும் அல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்'' எனக் கூறி ''உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்'' என்றார்.
69. அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்'' என்றார்.