127. இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.
128. எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்கள் சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! (‘ஹஜ்ஜூ' காலத்தில்) நாங்கள் புரியவேண்டிய வணக்கங்களை எங்களுக்கு அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.
129. எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த ஞானங்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன், ஞானமுடையவன்'' (என்று பிரார்த்தித்தனர்).
130. எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில்தான் இருப்பார்.
131. இப்றாஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் ‘‘நீ (எனக்கு) பணிந்து வழிப்படு!'' எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) ‘‘அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் பணிந்து வழிப்பட்டேன்'' எனக் கூறினார்.
133. (யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி ‘‘எனக்குப் பின்னர் எதை வணங்குவீர்கள்?'' எனக் கேட்டதற்கு ‘‘உமது இறைவனும், உமது மூதாதைகளான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே ஓர் இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்'' என்றே கூறினார்கள்.
134. (மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல்கள் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்கள்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.