257. அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்.
258. (நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்றாஹீம் ‘‘எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கிறானோ அவன்தான் என் இறைவன்'' என்று கூறியதற்கு, அவன் ‘‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்'' என்று கூறினான். (அதற்கு) இப்றாஹீம் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத்திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்குத்திசையில் உதயமாக்கு'' எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.
259. (நபியே!) அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப்போல் (நீர் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) ‘‘இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்த பின் அல்லாஹ் இதை எப்படி உயிர்ப்பிப்பான்?'' என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி ‘‘இந்நிலையில்) நீர் எவ்வளவு காலம் இருந்தீர்'' எனக்கேட்க ‘‘ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்'' எனக் கூறினார். (அதற்கு அவன்) ‘‘அல்ல! நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர். (இதோ!) உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக!. (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உமது கழுதையைப் பார்ப்பீராக. (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கிறது.) இன்னும் உம்மை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்புகளையும் நீர் பார்ப்பீராக. எப்படி அவற்றைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கிறோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறினார்.