89. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கிறது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப் பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, (அந்த) நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!
90. (இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
91. ‘‘அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘‘எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவற்றை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறி அவற்றைத் தவிர உள்ள இ(ந்)த(க் குர்ஆ)னை நிராகரித்து விடுகிறார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! அவர்களை நோக்கிக்) கேட்பீராக: ‘‘(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
92. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கிறீர்கள்.
93. உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்குமேல் (‘தூர்') மலையை உயர்த்தி ‘‘உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்'' என்று கூறியதற்கு (அவர்கள் ‘‘நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டார்கள். ‘‘(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது'' என்று (நபியே!) கூறுவீராக.