25. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீர் நற்செய்தி கூறுவீராக. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும் போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டுக்)கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரேவிதமாகத் தோன்றக்கூடியவற்றையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்.) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். மேலும், அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
26. கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால், எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக்கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக்கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக்கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.
27. அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்கு) திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.
29. அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான்.