216. (நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
217. (நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.
218. எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
219. (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்.