191. ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால், (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர்புரிய முற்படும்வரை நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். (அந்த) நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இப்படித்தான்!
192. (இதன்) பின்னர் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
193. (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.
194. (போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
195. நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.
196. அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் ‘ஹத்யு' (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும்வரை நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவற்றால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும். அல்லது, (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது, (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். மேலும், (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜூ செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மட்டும்) செய்துவிட்டு ஹஜ்ஜூக்கு முன்னதாகவே (ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில்* இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜூடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.