62. (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
63. அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன்.
65. நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
66. எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
67. (இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
68. அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
69. ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.