26. நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
27. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.
28. மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
29. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்.
30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.
31. நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
32. மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக.
33. ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்.