17. (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
19. (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
20. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்.
23. அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்.
24. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
25. நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.