41. (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
42. நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
43. (நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
44. அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
45. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.