53. எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான்.
54. (ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
56. (இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை.
57. போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம்.
58. (உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.
60. அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
61. (நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.