இன்னும், மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை - அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக - அழைக்கிறார்கள். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் (பொய்யான தெய்வங்களை) இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆக, (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! ஆக, (மறுமையில் உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அ(ந்த ஆதாரமான)து பேசுகிறதா?
இன்னும், மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்னும், அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் அவர்களை ஒரு தீமை அடைந்தால், அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகிறார்கள்.
இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஆகவே, உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இ(வ்வாறு தர்மம் கொடுப்ப)துதான் சிறந்ததாகும். இன்னும், இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்பவர் உங்கள் தெய்வங்களில் இருக்கிறாரா? (அல்லாஹ்வாகிய) அவனோ மிக பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது, மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களை சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக.