(இதை) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறிய மாட்டார்கள்.
அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இன்னும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
இவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே! இவர்களை விட ஆற்றலால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். இன்னும், அவர்கள் பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களுடைய இறைத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றைக் கேலி செய்பவர்களாக இருந்தனர்.
அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் உருவாக்குகிறான். பிறகு, அவனிடமே, நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
அவர்களுக்கு அவர்க(ளை வழிகெடுத்த அவர்க)ளுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) (தங்களால் வழிகெடுக்கப்பட்ட) தங்களது நண்பர்க(ள் தங்களுக்கு செய்த வழிபாடுக)ளை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.