இன்னும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால், அப்போது நீங்கள் (அதிலிருந்து உயிருடன்) வெளியேறுவீர்கள்.
அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைப்பான். அதுவோ அவனுக்கு மிக இலகுவானதாகும். இன்னும், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத் தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
(இணைவைப்பாளர்களே!) அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். நாம் உங்களுக்கு (மட்டும் உரிமையாக்கி) கொடுத்த (செல்வத்)தில் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) யாரும் உங்களுக்கு பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிடுவதும் முடியுமா? அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை - (உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகள் உங்களுடன் பங்காளிகளாக ஆகுவதை பயப்படுகிறீர்கள். யாரையும் கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று நினைக்கிறீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ் எப்படி தனது படைப்புகளை தனக்கு உரிமையானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு எந்தத் தகுதியும் யாருக்கும் இல்லையே!) சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி, தங்கள் மன விருப்பங்களை பின்பற்றுகிறார்கள். ஆக, அல்லாஹ் எவரை வழிக் கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? இன்னும், உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இல்லை.
ஆக, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கும் நிலையில் உமது முகத்தை(யும் உமது சமுதாய மக்களுடன் அல்லாஹ்வின்) மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அதுதான். அ(ந்த மார்க்கத்)தில்தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படை(ப்பின் அமை)ப்பை மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (தங்கள் தவறை) அறிய மாட்டார்கள்.
(நீங்கள் அனைவரும்) அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக இருங்கள். இன்னும், அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
தங்களது மார்க்கத்தை(யும் வழிபாடுகளையும் இறைவன் அல்லாதவர்களுக்காக) பிரித்து பல (கடவுள்களை வணங்கி, பல) பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.