அல்லது, “நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஆகி இருப்பேனே” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
அல்லது, “அந்த ஆன்மா தண்டனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகி விடுவேன்” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)
இன்னும் மறுமை நாளில் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்களை - அவர்களின் முகங்கள் கருப்பாக இருப்பதை - (நபியே!) நீர் பார்ப்பீர். (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) பெருமை அடிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அவர்களின் நிலையான தங்குமிடம் நரகம்தான்.)
இன்னும், அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவர்களின் நல்லமல்களின் காரணத்தால் அல்லாஹ் (நரகத்திலிருந்து) பாதுகாப்பான். அவர்களை தீங்குகள் அணுகாது. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அவனுக்கே வானங்கள், இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் உரியன. எவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ அவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள் ஆவார்கள்.
(படைப்புகளை வணங்காமல்) மாறாக, (யாவரையும் படைத்தவனாகிய) அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வணங்குவீராக! இன்னும், (அவனுக்கு) நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!
(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.