ஆக, அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை - அது அவனிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அங்குதான் அவர்களின் தங்குமிடம் இருக்கிறது.)
அவர்கள் செய்த கெட்ட செயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் போக்கிவிடுவதற்காகவும் அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளுக்கு பகரமாக அவர்களுக்கு அவர்களின் கூலிகளை அல்லாஹ் கொடுப்பதற்காகவும் (இத்தகைய அழகிய முறையில் அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்).
அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை.
(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை (-வணங்குபவை)ப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை (என்னை விட்டு) நீக்கிவிடக்கூடியவையா? அல்லது, அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை (என்னை விட்டும்) தடுத்துவிடக்கூடியவையா?” (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவும்.”
(நபியே!) கூறுவீராக! “என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு அமல் செய்யுங்கள்! நிச்சயமாக நானும் (என் தகுதிக்குத் தக்கவாறு) அமல் செய்கிறேன். ஆக, நீங்கள் (உங்கள் கெட்ட முடிவை) விரைவில் அறிவீர்கள்.”