இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களுக்கு முன் (மறுமையில்) வெளிப்படும். இன்னும், அவர்கள் எதைப் பற்றி கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்து கொள்ளும்.
ஆக, மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கிறான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (நான் அதற்கு தகுதியானவன் என்ற அல்லாஹ் உடைய) அறிவின்படிதான். (அவன் கூறுவது போன்றல்ல.) மாறாக, (அவனுக்கு) அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (செல்வம் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை) அறியமாட்டார்கள்.
திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் இதைச் சொல்லி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
ஆக, அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் எவர்கள் அநியாயம் செய்தார்களோ அவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். இன்னும், அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.
“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கிறான். (தான் நாடுபவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கிறான்” என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
இன்னும், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகிய (வேதத்தை; இன்னும், நபியின் மூலம் வழங்கப்பட்ட சுன்னா என்ற அழகிய ஞானத்)தை நீங்கள் (உறுதியாக) பின்பற்றுங்கள்,
“அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் கேலி செய்பவர்களில்தான் இருந்தேன்” என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)