ஆக, அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமை ஏற்பதற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் தாருஸ் ஸலாம் (-ஈடேற்றமுடைய இல்லம் என்ற சொர்க்கம்) உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவன் அவர்களுடைய நேசனும் ஆவான்.
இன்னும், அவன் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில், (ஜின்களை நோக்கி) “ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்’’ (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரினால் பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)’’ என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) “நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள், அல்லாஹ் நாடினால் தவிர.’’ என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
“ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே! உங்களிலிருந்து தூதர்கள் என் வசனங்களை உங்களுக்கு விவரிப்பவர்களாக; இன்னும், உங்கள் இந்நாளை உங்களுக்கு எச்சரிப்பவர்களாக உங்களிடம் வரவில்லையா?’’ என்று கூறுவான். அதற்கவர்கள், “(எங்கள் இறைவனே!) எங்களுக்கு எதிராக சாட்சியளித்தோம்" என்று கூறுவார்கள். உலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.