(அவனே இருளிலிருந்து) ஒளியை பிளப்பவன்; இன்னும், இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.
இன்னும், நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான், நீங்கள் தரையிலும் கடலின் இருள்களிலும் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக. அறிவுள்ள சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக நாம் விவரித்து விட்டோம்.
இன்னும், அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆக, (ஒவ்வொரு ஆன்மாவிற்கும்) ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. சிந்தித்து புரிகின்ற சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக விவரித்தோம்.
இன்னும், அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் நாம் உற்பத்தி செய்தோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் உற்பத்தி செய்தோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் உற்பத்தி செய்கிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிப்பதற்கு) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஆலிவ் பழங்களையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளைகளையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் இன்னும், அவை பழமாகுவதையும் கவனித்துப் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இன்னும், அவர்கள் ஜின்களை அல்லாஹ்விற்கு இணையான தெய்வங்களாக ஆக்கினர். அவனோ அவர்களைப் படைத்திருக்கிறான். இன்னும், அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் (இந்த கற்பனைகளை விட்டு) மகாத் தூயவன். இன்னும் அ(ந்த இணைவைப்ப)வர்கள் வருணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.
(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன் (-முன்மாதிரி இன்றி அவற்றை படைத்தவன்). அவனுக்கு மனைவி இல்லாமல் இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்க முடியும்? இன்னும், அவனோ எல்லாவற்றையும் படைத்தான். (அவனைத் தவிர எல்லாம் படைக்கப்பட்டவையே!) இன்னும், அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.