மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் இவர்களுக்கு எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் வணங்கப்பட்டதை(யும் இவர்கள் தங்களை வணங்கியதையும்) மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
இன்னும், இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டபோது, அவர்களிடம் உண்மை வந்தபோது அந்த உண்மைக்கு, “இது தெளிவான சூனியமாகும்” என்று நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்.
“இவர் இதை இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (-பரிந்துரை செய்யவோ அவனது தண்டனையை நீக்கவோ) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே போதுமான சாட்சியாளனாக இருக்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.”
(நபியே!) கூறுவீராக! “நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. இன்னும், எனக்கு என்ன செய்யப்படும், உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.”
(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து (உண்மையில்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருக்கிறது, நீங்கள் அதை நிராகரித்துவிட்டீர்கள். ஆனால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு (-இதில் முஹம்மத் நபியைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைப் போன்று முந்திய வேதம் தவ்ராத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு) சாட்சி கூறினார். ஆக, (அவர் இந்த நபியை) நம்பிக்கை கொண்டு விட்டார். ஆனால், நீங்களோ (அவரை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடித்து (நிராகரித்து) விட்டீர்கள். (இதை விட பெரிய அநியாயம், பெரிய நிராகரிப்பு வேறு என்ன இருக்கும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
நிராகரித்தவர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “இ(ந்த வேதமான)து சிறந்ததாக இருந்தால் (பாமர மக்களாகிய) இவர்கள் இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று (கேலியாக) கூறுகிறார்கள்.
இன்னும், இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டுகின்ற முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கிறது. (அதையும் நாம்தான் இறக்கினோம். அது இந்த வேதத்திற்கு சாட்சியாக இருக்கிறது.) இன்னும், இதுவோ (முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய, (தெளிவான) அரபி மொழியில் உள்ள வேதமாகும். அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாக இருப்பதற்காகவும் (இது இறக்கப்பட்டது).
நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.