வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள், எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள்.
(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) அழைப்பவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காண்பியுங்கள்? அல்லது, வானங்க(ளையும் வானங்க)ளில் (உள்ள படைப்புகளை படைத்ததிலும்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை; அல்லது, (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள், நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் (ஆதாரத்தைக் காட்டுங்கள்!).”
அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைப்பவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ மறுமை நாள் வரை இவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இன்னும், இவர்களின் அழைப்பை அவர்கள் அறியவும் மாட்டார்கள்.