ஆக, அல்லாஹ்வின் கிருபை இன்னும் அருளுடன் அவர்கள் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் (நம்பிக்கையாளர்கள் மீது) மகத்தான அருளுடையவன் ஆவான்.
இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் அறவே நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். இன்னும், அவர்களுக்கு மகத்தான தண்டனை உண்டு.
நிச்சயமாக, நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை வாங்கியவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
நிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(ளை உடனே தண்டிக்காமல் அவர்க)ளுக்கு அவகாசம் அளிப்பது அவர்களுக்கு நல்லதென்று” - நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவர்களுக்குண்டு.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடு(த்து அவருக்கு அறிவி)ப்பான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி (அல்லாஹ்விடம்) உண்டு.
இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.