இதற்கு முன்னர் (தவ்ராத்தையும் இன்ஜீலையும் இஸ்ராயீலுடைய) மக்களுக்கு நேர்வழி காட்டியாக (இறக்கினான்). இன்னும், (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தை (உம்மீது) இறக்கினான். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடினமான தண்டனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.
(நபியே!) அவன் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரிய முடியாத வேறு (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரியமுடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்களோ, “அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)’’ என்று கூறுவார்கள். நிறைவான அறிவுடையவர்களைத் தவிர (யாரும்) நல்லுபதேசம் பெறமாட்டார்.
“எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! இன்னும், உன்னிடமிருந்து (உனது) கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் மகா கொடைவள்ளல் ஆவாய்!