(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!
“இதற்கு முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததையும் (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லை” என்பதையும் அந்த மனிதன் சிந்திக்க வேண்டாமா!
ஆக, உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பிறகு, அவர்கள் முழங்காலிட்டவர்களாக இருக்கும் நிலையில் நரகத்திற்கு அருகில் அவர்களைக் கொண்டுவருவோம்.
பிறகு, எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் (நரகத்தில் விழுந்துவிடாமல்) பாதுகாப்போம். இன்னும், அநியாயக்காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி) விட்டுவிடுவோம்.
அவர்களுக்கு முன் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி, “(நம்) இரு பிரிவுகளில் தங்குமிடத்தால் யார் சிறந்தவர், இன்னும், சபையால் யார் மிக அழகானவர்?” என்று (கேலியாக) கூறுகிறார்கள்:
இன்னும், இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் (இவர்களை விட வீட்டு பயன்பாட்டுப்) பொருட்களாலும் (செல்வத்தாலும் உடல்) தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்.
(நபியே!) கூறுவீராக: (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கிறாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை - ஒன்று தண்டனையை; அல்லது, மறுமை நாளை- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.