“ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும் பழங்களை) புசிப்பீராக! இன்னும், (அந்த நீரோடையிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! ஆக, மனிதர்களில் யாரையும் நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை (-பேசாமல் இருப்பதை) நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன்” என்று கூறுவீராக!”
ஆக, அவள் அ(ந்)த (குழந்தையிடம் கேட்கும்படி அத)ன் பக்கம் சைகை காண்பித்தாள். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”
இன்னும் நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுப்பவனாக, நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு நன்மை செய்பவனாக) ஆக்குவான். இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.
நான் பிறந்த நாளிலும் எனக்கு ஸலாம் - ஈடேற்றம் கிடைத்தது. (அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் என் மீது ஸலாம் உண்டாகுக!
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா ஆவார். (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இவர் விஷயத்தில்தான் அவர்கள் தர்க்கிக்கிறார்கள். (யூதர்கள் கூறுவதுபோன்று அவர் மந்திரவாதியும் அல்ல. கிறித்தவர்கள் கூறுவதுபோன்று அவர் அல்லாஹ்வின் மகனோ, அல்லாஹ்வோ, கடவுள் மூவரில் ஒருவரோ அல்ல. மாறாக அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.)
(தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்.
ஆக, பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (ஈஸா பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, (அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் வேத அறிவிப்பை) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான் உண்டாகும், மகத்தான நாளை (அவர்கள்) காணும்போது.
அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில் நன்றாக செவிசாய்ப்பார்கள்; இன்னும், நன்றாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் செவியுறுவதும் பார்ப்பதும் அன்று அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.