32. இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
33. எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.
34. எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
35. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
36. நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.