109. (நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
110. பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
111. என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).
112. தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
113. அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.