6. உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.
7. அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீர் மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் ‘‘இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
8. (நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் ‘‘அதைத் தடுத்துக்கொண்டது எது?'' எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
9. நம் அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகிவிடுகிறான்.
10. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
11. ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
12. (நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீர் சடைந்து) உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ? ‘‘உமக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உம்முடன் ஒரு வானவர் வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவது உமது உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீர் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கின்ற ஒரு தூதர்தான். அல்லாஹ்தான் அனைத்தையும் நிர்வகிப்பவன்.