72. அதற்கவள், ‘‘என் துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என் இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!'' என்றாள்.
73. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன்'' என்று கூறினார்கள்.
74. இப்றாஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் ‘லூத்' தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய வானவர்களு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
76. (ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீர் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுவீராக. நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உமது இறைவனுடைய கட்டளை பிறந்து விட்டது. மேலும், நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்).
77. (இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர் (அந்த வானவர்களைத் தம் மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி ‘‘இது மிக நெருக்கடியான நாள்'' என்று கூறினார்.
78. (இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு (‘லூத்' நபி அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! இதோ! என் பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களைத் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களில் இல்லையா?'' என்று கேட்டார்.
79. அதற்கவர்கள் ‘‘உமது பெண்மக்களிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்'' என்றும் கூறினார்கள்.
80. அதற்கவர் ‘‘உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?'' என்று (மிக துக்கத்துடன்) கூறினார்.
81. (அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) ‘‘லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய வானவர்)களாவோம். இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடைய முடியாது. (இன்று) இரவில் ஒரு சிறு பகுதி இருக்கும்பொழுது நீர் உம் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக; (உமது சொல் கேளாத) உமது மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற வேதனை நிச்சயமாக அவளையும் அடையும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?'' என்று கூறினார்கள்.