அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் நீங்கள் உடன்படிக்கை செய்த இணைவைப்பாளர்களை நோக்கி அறிவிக்கப்படுவதாவது: “(அல்லாஹ்வும் ரஸூலும் இணைவைப்பாளர்களின் உடன்படிக்கையிலிருந்து) விலகி விடுகிறார்கள்” என்று.
ஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். இன்னும், “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”
இன்னும், இணைவைப்பவர்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து, மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் (அறிவிக்கப்படும்) அறிவிப்பாகும் இது. ஆகவே, (இணைவைப்பதிலிருந்து) நீங்கள் திருந்தினால் அது உங்களுக்கு மிக நல்லதாகும். நீங்கள் (திருந்தாமல்) விலகினால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை உண்டு என்று நற்செய்தி கூறுவீராக.
(எனினும்,) இணைவைப்பவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து, பிறகு அவர்கள் (உடன்படிக்கையின் அம்சங்களில்) எதையும் உங்களுக்கு குறைக்காமலும், உங்களுக்கு எதிராக (எதிரிகளில்) ஒருவருக்கும் உதவாமலும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய (உடன்படிக்கையின்) தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
ஆக, புனித மாதங்கள் முடிந்துவிட்டால் (மக்கா நகரத்தை சேர்ந்த) இணைவைப்பாளர்களை - நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும் - கொல்லுங்கள்; இன்னும், அவர்களை(ச்சிறைப்) பிடியுங்கள்; இன்னும், அவர்களை முற்றுகையிடுங்கள்; இன்னும், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்களை எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள். ஆக, அவர்கள் (இணைவைப்பிலிருந்து) திருந்தி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்தால் அவர்களுடைய வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன் பெரும் கருணையாளன் ஆவான்.
இன்னும், (நபியே!) அந்த இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவார்கள்.