நபியே! (நபியின் சமுதாய மக்களே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும், இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் – வரும் வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் (தாமாக) வெளியேற வேண்டாம், (விபச்சாரம் என்ற) தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. (அப்போது நீங்கள் அவர்களை வெளியேற்றலாம்.) இவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள்! அப்போது இத்தா முடிந்து விட்டாலும் அவர்கள் மீண்டும் திருமண ஒப்பந்தம் செய்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.)
ஆக, அவர்கள் (-அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைய நெருங்கிவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது, நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) உங்களில் நீதமான இருவரை சாட்சியாக்குங்கள்! அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள்! இவை (-இந்த சட்டங்கள்), எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகிறார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்.
இன்னும், அவர் நினைத்துப் பார்க்காத விதத்திலிருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தி இருக்கிறான்.
உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணையாவது அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அவரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்.
இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் இதை உங்களுக்கு இறக்கி இருக்கிறான். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவரை விட்டும் அவரின் பாவங்களை அவன் போக்குவான். இன்னும், அவருக்கு வெகுமதியை பெரிதாக்குவான்.