நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள் ஆவார்கள். இன்னும், உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர் ஆவார். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
ஆக, (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களுடன் (நட்புவைக்க) விரைபவர்களாக இருப்பதைக் காண்பீர்! “ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, அல்லாஹ் தன்னிடமிருந்து (நம்பிக்கையாளர்களுக்கு) வெற்றியை அல்லது (யூதர்களின் தாக்குதலை உங்களை விட்டு தடுக்கும்படியான) வேறு ஒரு காரியத்தை கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
நிச்சயமாக அவர்கள் உங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் (நயவஞ்சகர்களைப் பற்றி) கூறுவார்கள். (நயவஞ்சகம் உடைய) அவர்களின் (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (அவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்கள் மீது அன்பு வைப்பான்; அவர்களும் அவன் மீது அன்பு வைப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இன்னும், பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்களும்தான். இன்னும், அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள்.
இன்னும், எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் நேசி(த்து அவர்களுடன் நட்பு வை)க்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உங்கள் மார்க்கத்தை கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக (நேசர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.