எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். அவன்தான் மகா கருணையாளன், மகா மன்னிப்பாளன்.
“மறுமை எங்களிடம் (ஒருபோதும்) வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் அவனை விட்டும் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் இல்லை, (அவை அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர!”
நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் கூலி கொடுப்பதற்காக (அந்தப் பதிவேட்டில் செயல்கள் பதியப்படுகின்றன). அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான வாழ்க்கையும் (சொர்க்கத்தில்) உண்டு.
கல்வி கொடுக்கப்பட்டவர்கள், உமது இறைவனிடமிருந்து உமக்கு எது இறக்கப்பட்டதோ அதுதான் சத்தியம் என்றும்; மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு அது நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்.
நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் சுக்குநூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கிற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?”