இன்னும் காரூனையும் ஃபிர்அவ்னையும் ஹாமானையும் நினைவு கூருங்கள்! திட்டவட்டமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை மூஸா கொண்டு வந்தார். ஆக, அவர்கள் பூமியில் பெருமையடித்தனர். அவர்கள் (நம்மிடமிருந்து) தப்பி விடுபவர்களாக இல்லை.
ஆக, (இவர்களில்) ஒவ்வொருவரையும் அவர்களின் பாவத்தினால் நாம் தண்டித்தோம். எவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை இடி முழக்கம் பிடித்ததோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், நாம் யாரை பூமியில் சொருகினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை நாம் மூழ்கடித்தோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு தாமே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போலாகும். அது (தனக்கு) ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் (அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றவற்றின் பலவீனத்தை) அறிந்திருக்க வேண்டுமே!
நிச்சயமாக அல்லாஹ், அவனை அன்றி அவர்கள் எதை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அது எதுவாக இருந்தாலும் அதை அல்லாஹ் நன்கறிவான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
இந்த வேதத்திலிருந்து உமக்கு வஹ்யில் எது அறிவிக்கப்பட்டதோ அதை ஓதுவீராக! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது. அல்லாஹ் (உங்களை) நினைவு கூர்வது (நீங்கள் அவனை நினைவு கூர்வதை விட) மிகப் பெரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.