நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது இவ்வுலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். (மறுமையில்) அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அதை) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
ஆக, எவருக்கு நாம் அழகிய வாக்குகளை வாக்களித்து, அவர் அவற்றை (மறுமையில்) அடைவாரோ அ(ந்த நம்பிக்கையாளரான நல்ல)வர் இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தை நாம் யாருக்கு கொடுத்து, பிறகு, அவர் மறுமை நாளில் நரகத்தில் தள்ளப்படுவாரோ அ(ந்த நிராகரிப்பாளரான கெட்ட)வரைப் போன்று ஆவாரா?
இன்னும், (இணைவைத்து வணங்கிய) அவர்களை அவன் அழைத்து, (இவை எங்கள் தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்த எனக்கு இணையாக வணங்கப்பட்ட (உங்கள்) தெய்வங்கள் எங்கே? என்று அவன் கேட்கும் நாளில்,
(அல்லாஹ்வின் சாப) வாக்கு உறுதியாகிவிட்டவர்கள் (-ஷைத்தான்கள்) கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) விலகி உன் பக்கம் நாங்கள் ஒதுங்கி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை.”
இன்னும், (இணைவைப்பாளர்களை நோக்கி) கூறப்படும்: “(நீங்கள் அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!” ஆக, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், (அவர்கள் எல்லோரும் தாங்கள் அடையப்போகும்) தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். “நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே!” (என்று அப்போது ஆசைப்படுவார்கள்!)
ஆக, அந்நாளில் (ஏற்படும் திடுக்கத்தால் அவர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அந்த) செய்திகள் அவர்களுக்கு தெரியாமல் போய் விடும். ஆகவே, அவர்கள் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் எதையும்) கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.
இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான். (இணைவைக்கின்ற) அவர்களுக்கு (அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்ய எந்த) உரிமையும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிக உயர்ந்தவனாக இருக்கிறான்.
அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், தீர்ப்பளித்தல் அவனுக்கே உரிமையானது! இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.